நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம், தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய சமந்தா, சென்னையில் தனது பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தானே என்பதையும் குறிப்பிட்டார். தனது தயாரிப்பு நிறுவனம் பெண்களை மையமாகக் கொண்ட வலுவான கதாபாத்திரங்களை முன்னிறுத்தும் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதன்படி, இந்த திரைப்படத்தில் முதலில் நடிகை சாய் பல்லவியை நடிக்க ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், ஆனால் அவரின் பிஸியான கால்ஷீட் காரணமாக அது சாத்தியமாகாத நிலையில், படத்தில் கூடுதல் ஆக்ஷன் காட்சிகளை சேர்த்து தானே கதாநாயகியாக நடிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், தனக்கு நடனக் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது எளிதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய சமந்தா, தமிழ் சினிமாவில் மீண்டும் சிறந்த கதைகளைத் தேடி வருவதாகவும், இந்த திரைப்படத்தைப் போன்ற தரமான கதைகள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பதாகவும் தெரிவித்தார். தயாரிப்பாளராக இருப்பதை விட நடிகையாக செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதாக கூறிய அவர், கடந்த ஐந்து நாட்களாக ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் இருக்கும் சவால்கள் மற்றும் பொறுப்புகளை நேரடியாக உணர்ந்ததாகவும் பகிர்ந்துகொண்டார். தமிழ்நாடு தான் தனது வீடு என்றும், ரசிகர்கள் தன்னை பெருமைப்படும் வகையில் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், தமிழில் மீண்டும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், இயக்குநர்கள் தமக்கு சிறந்த கதைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் “நான் யார் தெரியுமா?” என்ற மாஸ் வசனத்தை பேசுவது தனக்கு மிகவும் சிரமமாக இருந்ததாகவும், அந்த வசனத்திற்காக பல முறை டேக் எடுக்க வேண்டியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். குறிப்பாக அந்த பில்ட்அப் வசனத்தை பேசும்போது தனக்கு வெட்கமாக இருந்ததாகவும், அதனால் அந்த காட்சியில் அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகவும் சமந்தா சிரித்தபடி கூறினார்.
—
