பிரம்மயுகம் பட இயக்குனரின் இயக்கத்தில் பிரித்விராஜ் – மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் “ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்” !

‘பூதகாலம்’ மற்றும் மம்மூட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான கவனத்தைப் பெற்ற இயக்குநர் ராகுல் சதாசிவன், தற்போது தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நட்சத்திரங்களான பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்முறையாக இந்த ஹாரர்-த்ரில்லர் திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ், முதல் முறையாக மலையாள திரைப்படத் துறையில் தனது தடத்தை பதிக்கிறது. இதனுடன் இணைந்து பிருத்விராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸும் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

19ஆம் நூற்றாண்டின் கேரளாவை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பகுதியில் பரவலாக அறியப்படும் உள்ளூர் புராணக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. “உண்மைக்கும் மாயைக்கும் இடையிலான போர்” என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள தலைப்பு போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

முன்னதாக 2018ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் ‘ஒடியன்’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ராகுல் சதாசிவன் இயக்கும் ‘ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்’ திரைப்படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடனும் புதிய கற்பனை உலகத்துடனும் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்பக் குழு மற்றும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading