1980களில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் வாழும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் ‘ஹபீபி’. கஸ்தூரிராஜா தனது தம்பியுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். விசைத்தறி வருகையால் அந்த தொழில் பாதிக்கப்பட, அவரது தம்பி வேலைக்காக ரியாத்திற்கு செல்கிறார். கஸ்தூரிராஜாவின் மகன் ஈசா, காதல் மற்றும் ஊர்ப்பாசத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது சூழ்நிலை காரணமாக அவனும் வெளிநாடு செல்கிறான். அதன்பின் குடும்பத்தின் பொருளாதார நிலை ஓரளவு மேம்படுகிறது. பின்னர் ஊருக்கு திரும்பும் ஈசாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் அதில் பல தடைகள் மற்றும் குடும்பச் சிக்கல்கள் உருவாகின்றன. இறுதியில் ஈசாவின் திருமணம் நடைபெற்றதா, அவன் மீண்டும் வெளிநாடு சென்றானா, அவனது முதல் காதலிக்கு என்ன ஆனது என்பதற்கான பதில்களே ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதை. அரபி மொழியில் ‘ஹபீபி’ என்பதற்கு ‘என் அன்பே’ என்று பொருள்.
கதையின் மையமாக குடும்பத் தலைவரான யூசுப் என்ற கஸ்தூரிராஜாவின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. வீட்டிலேயே தறி வைத்து லுங்கி தயாரிக்கும் அவரது வாழ்க்கை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் தம்பி, மகனுக்காக அவர் அனுபவிக்கும் கவலைகள் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்துகின்றன. இடைவேளைக்குப் பிறகு அவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் சற்றுக் குறைந்தாலும், அவர் எடுக்கும் முடிவுகளும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் கண்கலங்க வைக்கின்றன. ஹீரோவாக நடித்துள்ள புதுமுகம் ஈசா, டீனேஜ் இளைஞராகவும், பலமுறை வெளிநாடு சென்று பின்னர் ஊரில் செட்டில் ஆக நினைக்கும் இளைஞராகவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இளமைக்கால காட்சிகளில் அவரது குறும்பும் காதல் காட்சிகளும் மனதை கவர்கின்றன. ஒரு பிரச்சினையில் சிக்கி அவமானப்படும் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு கவனம் பெறுகிறது.
பிற்பாதியில் குடும்பப் பிரச்சினைகள், திருமண ஏற்பாடுகள் மற்றும் அதனால் உருவாகும் சிக்கல்களை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ‘ஹபீபி’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் அதில் இடம்பெற்றுள்ள பாட்டி, அம்மா, சித்தி, காதலி, காதலியின் அம்மா, தங்கை, முற்போக்கு சிந்தனை கொண்ட பெண் மற்றும் தோழிகள் உள்ளிட்ட பெண் கதாபாத்திரங்கள்தான். இஸ்லாமிய பின்னணியில் அவர்களின் நடை, உடை, பேச்சு, கோபம் மற்றும் உணர்வுகள் அனைத்தும் மிகவும் இயல்பாகவும் வலிமையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்த பெண்களின் பாசம், கோபம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் படத்தை பார்வையாளர்களுக்கு நெருக்கமாக்குகின்றன. அவர்களை பார்க்கும்போது நம்முடைய குடும்பத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வாழ்ந்தவர்களை நினைவுபடுத்தும் உணர்வு ஏற்படுகிறது.
குறிப்பாக, ஹீரோவின் சிறுவயது காதலியாக நடித்துள்ள மாளவிகா மனோஜ் குறைந்த வசனங்களுடனேயே அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோவின் சித்தியாக நடித்துள்ள மலையாள நடிகை அனஸ்ரேயா ராஜன் இளமையும் நடுத்தர வயதுமான இரண்டு பரிமாணங்களில் தோன்றுகிறார். அவரது நடிப்பு, ஏக்கம் மற்றும் கோப வெளிப்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஒரு காட்சியில் தனது நகைகளை கழற்றி கொடுக்கும் தருணம் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது. அதேபோல், இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் கல்வி கற்ற பெண்ணாகவும் பெண்ணுரிமை குறித்து பேசுபவராகவும் தனஸ்ரீ நடித்துள்ளார். அவரது உற்சாகம், கேள்விகள் மற்றும் முடிவுகள் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. இவர்களைத் தவிர, பள்ளி ஆசிரியர், கஸ்தூரிராஜா மற்றும் ஈசாவின் நண்பர்கள், சித்தப்பா, ஊர்மக்கள், பண மோசடி செய்பவர்கள் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக இயல்பாக அமைந்துள்ளது. பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் படத்தின் பலமாகும்.
அந்த காலகட்ட கிராம வாழ்க்கை, இஸ்லாமிய தெருக்கள், பள்ளிவாசல்கள், திருமணங்கள், இறுதிச்சடங்குகள் மற்றும் தறி நெசவு போன்றவற்றை ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். அதேபோல், கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப இசை மற்றும் பாடல்களை வழங்கி சாம்.சி.எஸ். சிறப்பாக செயல்பட்டுள்ளார். ‘கப்பலுக்கு போன மச்சான்’ மற்றும் ‘நாகூர் அனிபா’ பாடல்களை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் ரசனையை வெளிப்படுத்துகிறது. தறி நெசவு, கூட்டுக் குடும்ப வாழ்க்கை, வெளிநாட்டு வேலை, காதல், உறவுச் சிக்கல்கள், அன்பு மற்றும் நவீன வாழ்க்கை தாக்கம் உள்ளிட்ட பல அம்சங்களை இணைத்து வலுவான கதையை கதாசிரியர் முகமது அமீன் உருவாக்கியுள்ளார். கலை இயக்குநர் அப்புண்ணியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி வட்டார மொழி மற்றும் சில வசனங்கள் உடனடியாக புரிவதில் சற்று சிரமம் இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு சில காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. குறிப்பாக திருமண ஏற்பாடு தொடர்பான காட்சிகள் நீளமாக தோன்றுகின்றன. மேலும், கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. இருப்பினும், இஸ்லாமிய குடும்பங்களின் வாழ்க்கை முறை, வலி, பாசம், தியாகம், மகிழ்ச்சி மற்றும் வேதனைகளை இவ்வளவு ஆழமாக தமிழ்சினிமாவில் யாரும் பதிவு செய்ததில்லை. அந்த வகையில் ‘ஹபீபி’ ஒரு முக்கியமான படைப்பாக திகழ்கிறது. 1980களில் தொடங்கி 2023 வரை விரியும் இந்தக் கதை, ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டிருந்தாலும் இதுவரை சொல்லப்படாத பல இஸ்லாமிய வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்கிறது. தேவையற்ற அரசியல் அல்லது மத மோதல்களைத் தொடாமல், ஒரு உணர்வுபூர்வமான சிறுகதையை வாசித்த அனுபவத்தை இந்த படம் வழங்குகிறது. அதன் கருவும், கதாபாத்திரங்களும், அவர்கள் பேசும் வசனங்களும் நீண்ட காலம் மனதில் நிற்கக்கூடியவை.
