“தோல்வியிலிருந்து மீண்டு வருவேன்”.. தனது பயணம் குறித்து மனம் திறந்த தமன்னா!

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. நடிப்புடன் தனது நடனத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களிலும் நடித்து வருவதுடன், நகை விற்பனை தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘மில்க்கி பியூட்டி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் தமன்னாவுக்கு, ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியில் வெளியான ‘ஸ்த்ரீ 2’ படத்தின் ‘ஆஜ் கி ராத்’ பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து கிடைத்த இந்த வரவேற்புகளால் அவரது திரைப்பயணத்திலும் கவனம் அதிகரித்தது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து பேசிய தமன்னா, தனது பாதையில் பல்வேறு வேகத்தடைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவை தனது வேகத்தையோ, நிதானத்தையோ மாற்றிவிடவில்லை என்றும், தொடர்ந்து தனது கனவுகளை நோக்கி பயணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் தோல்வி அல்லது சரிவை சந்திக்கும்போது, நம்பிக்கையுடன் மீண்டும் எழுந்து வருவதே தனது பலம் என்றும் தமன்னா குறிப்பிட்டுள்ளார். அந்த மனநிலையை எப்போதும் விட்டுவிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply