குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை நித்யா மேனன், கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். கவர்ச்சி கதாபாத்திரங்களை தவிர்த்து, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகைகளுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய நித்யா மேனன், “பெண்கள் கவர்ச்சியாக சித்தரிக்கப்படுவது தென்னிந்திய சினிமாவில் மட்டும் அல்ல, இந்திய திரைப்படத் துறையிலேயே பரவலாக காணப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்காக எல்லை மீறும் காட்சிகளில் நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்தப்படக் கூடாது. அப்படிப்பட்ட வாய்ப்புகளை துணிச்சலுடன் மறுக்கும் மனநிலை அவர்களிடம் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், “நடிகைகள் தங்களது நிலைப்பாட்டில் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருக்க வேண்டும். சில வகையான படங்களில் நான் நடிக்க மறுப்பதால் சில வாய்ப்புகளை இழந்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை. புகழையும் வெற்றியையும் விட தன்மானம் மற்றும் சுயமரியாதையே எனக்கு முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
