ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் அவரது ‘அச்சியம்மா’ கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண்களை காட்சிப்படுத்திய முறை, சில கேமரா கோணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தல் போன்ற விஷயங்களை இயல்பாக்கும் வசனங்கள் குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா பொதுவெளியில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். பெண்கள் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வாழ்வின் பல இடங்களிலும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். ரயில், பேருந்து, பொதுச் சாலைகள் போன்ற இடங்களிலும் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களையும் தொந்தரவுகளையும் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் பல சமயங்களில் மிகவும் தீவிரமானதாக இருப்பதாகவும் கங்கனா தெரிவித்தார். ஒரு பெண்ணை கவர்ச்சியாகக் காட்டுவதற்கும், ஆபாசமாக சித்தரிப்பதற்கும் இடையிலான எல்லை பல நேரங்களில் மங்கிவிடுகிறது என்றும், பொழுதுபோக்கு துறையின் நடைமுறைகளில் இதுபோன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
