நடிகர் அஜித் கடைசியாக நடித்த திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. அந்தப் படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலான காலம் கடந்துவிட்ட நிலையில், அவரது அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் கார் பந்தயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவர், சமீபத்தில் தனது தாயாரின் மறைவுக்குப் பிந்தைய குடும்ப பொறுப்புகளை நிறைவு செய்துவிட்டு மீண்டும் ரேசிங் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். தற்போது பிரான்சில் நடைபெறும் பந்தயத் தொடரில் அவர் பங்கேற்று வருகிறார்.
இதுகுறித்து பேசிய அஜித், கடந்த மூன்று ஆண்டுகளாக துபாயை மையமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும், தனது குடும்பத்தினர் இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய அவசியம் இருப்பதால், ஐரோப்பிய நாடுகளில் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டுக்கான பந்தயத் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ‘ஏசியன் லெ மான்ஸ்’ மற்றும் ‘இ.எல்.எம்.எஸ்’ தொடர்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னால் முடிந்தவரை ஒவ்வொரு ஆண்டும் ‘கிரெவென்டிக்’ தொடரில் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாக கூறிய அவர், தனது அணியில் உள்ள மெக்கானிக்குகள், பொறியாளர்கள் மற்றும் சக வீரர்கள் அனைவரும் மிகச் சிறந்த குழுவாக செயல்படுவதாகவும், அவர்களுடன் இருப்பது தனது இரண்டாவது குடும்பத்துடன் இருப்பதைப் போன்ற உணர்வை தருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் மூலம் அஜித் தற்போது கார் பந்தயங்களில் முழு கவனம் செலுத்தி வருவது தெளிவாகியுள்ளது.
