‘பெத்தி’ திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஏற்கனவே இயக்குநர் புச்சி பாபு சானா விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், தற்போது நடிகை டிம்பிள் ஹயாதியும் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஒரு திரைப்படத்தில் பெண் கதாபாத்திரம் கவர்ச்சியாகவோ அல்லது வலுவற்றதாகவோ காட்டப்பட்டால், அதற்காக அந்த நடிகையை மட்டும் குறை கூறுவது சரியல்ல. கதையை உருவாக்கும் எழுத்தாளரும், அதை திரையில் வடிவமைக்கும் இயக்குநரும்தான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நடிகைகள் திரையுலகில் நிலைத்திருக்கவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒருமுறை கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், தொடர்ந்து அதேபோன்ற வேடங்களே நடிகைகளுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் அவர்களது உண்மையான நடிப்புத் திறமை பலமுறை வெளிப்படாமல் போகிறது. ஹீரோக்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரவி தேஜாவுடன் ‘பர்தா மஹாசஹ்யுலகு விக்யாப்தி’ திரைப்படத்தில் நடித்திருந்த டிம்பிள் ஹயாதி, தற்போது ஷர்வானந்த் நடிப்பில் சம்பத் நந்தி இயக்கி வரும் ‘போகி’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
