பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் மிருணாள் தாகூர், தற்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், அங்கு தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கியுள்ளார். அவரை தமிழிலும் அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவருடன் அவர் ஜோடி சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிருணாள் தாகூர், வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பொதுவாக நாம் பல விஷயங்களை மகிழ்ச்சி என்று கருதுகிறோம். ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “மிகப் பெரிய அளவில் உதவி செய்ய முடியாவிட்டாலும், நம்மால் இயன்ற அளவிற்கு வறுமையில் வாழும் மக்களுக்கு உதவலாம். கர்மா என்ற கருத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நாம் செய்யும் உதவிக்கு பதிலாக ஏதாவது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. ஆனால் நமது உதவி ஒருவரின் வாழ்க்கையில் சிறிய மகிழ்ச்சியையாவது உருவாக்கினால் அதுவே எனக்கு போதுமான திருப்தியை தரும்” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
