சந்தீப் கிஷன் – ஜேசன் சஞ்சய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக தனது முதல் பயணத்தை ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் தொடங்கியுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும், நடிகைகள் பரியா அப்துல்லா மற்றும் கேத்தரின் தெரசா உள்ளிட்டோருடன், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜேசன் சஞ்சய், கனடாவின் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுதல் தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் பயின்றுள்ளார். திரைப்பட இயக்கத்திற்கான தனது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் விதமாக பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில், அவரது முதல் முழுநீள திரைப்படமான ‘சிக்மா’ உருவாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய் மற்றும் கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

‘சிக்மா’ திரைப்படம் குறித்து ஜேசன் சஞ்சய் கூறுகையில், “இந்த திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பானதும், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததுமான ஒரு அனுபவமாக அமைந்துள்ளது. எனது கதையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு வழங்கிய லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை விரைவில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அந்த பாடலை பிரபல நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading