மலையாள திரைப்படமான ‘பாய் பிரண்ட்’ மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஹனி ரோஸ், பின்னர் தமிழில் ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கேரளாவில் நடைபெறும் பெரிய கடை திறப்பு விழாக்களில் ஹனி ரோஸ் தவறாமல் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. அவர் அணியும் ஆடைகள் மற்றும் தனித்துவமான தோற்றத்தை காணவே ஏராளமான ரசிகர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது பல புதிய திரைப்படங்களில் நடித்து வரும் ஹனி ரோஸ், தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “சினிமாவிற்குள் நான் நுழைந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. ஆரம்ப காலத்தில் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்ததால், அங்கேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் பிற மொழி திரைப்படங்களில் அதிகமாக நடிக்க முடியவில்லை. இருந்தாலும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் அடிக்கடி கடை திறப்பு விழாக்களில் பங்கேற்பதற்கான முக்கிய காரணம் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களது அன்பை உணர்வதற்காகத்தான். என் வாழ்க்கையில் எத்தனை சவால்கள் மற்றும் பிரச்சினைகள் வந்தாலும், ரசிகர்களின் அன்புதான் என்னை உற்சாகப்படுத்தி முன்னேறச் செய்திருக்கிறது. அந்த அன்புக்கு நான் என்றும் உண்மையாக இருக்க விரும்புகிறேன். பொதுவாக திரை உலகில் இருப்பவர்கள் விமர்சனங்களை சந்திப்பது இயல்பான விஷயம்” என்றும் கூறியுள்ளார்.
அதோடு, “குறிப்பாக நடிகைகள் என்றாலே பலவிதமான விமர்சனங்களும் கருத்துக்களும் எழுவது வழக்கமாகிவிட்டது. எனக்கும் பல விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதில் அளிக்க வேண்டும் அல்லது விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது மேலும் பிரச்சினைகளை உருவாக்கும். அதனால் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு நதி ஓடுவது போல என் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “விரைவில் எனது நடிப்பில் புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ரசிகர்களுக்கு நல்ல படைப்புகளை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை சினிமாவில் எனக்கு போட்டி நானே தான். என் வெற்றியும் தோல்வியும் என்னைச் சுற்றியே அமைந்திருக்கிறது. அதனால் மற்றவர்களுடன் ஒப்பிடாமல், எனது பயணத்தில் கவனம் செலுத்துகிறேன். ஆடைத் தேர்விலும் நான் மிகவும் கவனமாக இருப்பேன். அதற்காக தனியாக ஒரு குழுவையும் வைத்துள்ளேன். என்னை நேசிக்கும் ரசிகர்களை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
