ஹிந்தி திரையுலகில் நடிகர் ஷாகித் கபூர், நடிகைகள் கிரித்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காக்டெய்ல் 2’ திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானதைத் தொடர்ந்து, நடிகை கிரித்தி சனோன் சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
இதற்குக் காரணம், இந்த திரைப்படத்திற்காக அவர் தனது உடல் அமைப்பில் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய மாற்றம்தான். குறிப்பாக கட்டுக்கோப்பான மற்றும் உடற்பயிற்சி மூலம் செதுக்கப்பட்ட தோற்றத்தில் அவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். திரைப்படத்தின் டிரைலரை பார்த்த பலரும் அவரது புதிய தோற்றத்தை பாராட்டி வருகின்றனர். அவருடன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா கூட, டிரைலரில் கிரித்தி சனோனின் தோற்றம் மிகவும் பிரமிக்க வைப்பதாகவும், அவரது கடின உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது என்றும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கிரித்தி சனோன் கூறுகையில், “இந்த திரைப்படத்தில் பிகினி தோற்றத்திற்கேற்ற உடல் அமைப்பைப் பெறுவதற்காக என் வாழ்க்கையில் முதல் முறையாக மிகவும் கடுமையான கட்டுப்பாட்டை பின்பற்றினேன். கலோரி குறைவான உணவுகளை மட்டுமே தொடர்ந்து எடுத்துக்கொண்டதுடன், பல மாதங்கள் தீவிரமான உடற்பயிற்சியிலும் ஈடுபட்டேன். அந்த உழைப்பும், கட்டுப்பாடும் தற்போது திரையில் நல்ல பலனை கொடுத்துள்ளது என்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காக்டெய்ல் 2’ திரைப்படம் வருகிற ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
—
