ஐயப்பனின் மகிமையை போற்ற வரும் ரவி தேஜா நடித்துள்ள ‘இருமுடிகட்டு’ !

சுவாமி அய்யப்பனின் மகிமையையும், ஆன்மிகப் பயணத்தின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவான மலையாள திரைப்படமான ‘மாளிகைப்புரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அதேபோன்ற ஆன்மிக பின்னணியைக் கொண்ட பல திரைப்படங்கள் மலையாளத்தில் உருவாகின. தற்போது தமிழில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘சன்னிதானம் போஸ்ட்’ திரைப்படம் தயாராகி வரும் நிலையில், இதே பாணியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ‘இருமுடிகட்டு’.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரவி தேஜா தனது வழக்கமான மாஸ் கதாபாத்திரங்களிலிருந்து விலகி, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். தனது மகளை உயிருக்கு உயிராக நேசிக்கும் அன்பான தந்தையாகவும், கோபம் நிறைந்த மனிதராகவும், பின்னர் தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மதுப் பழக்கத்தை கைவிட்டு பகவான் அய்யப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதராகவும் மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சரபாளம், கார்த்திக் அடுசுமல்லி மற்றும் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளதுடன், விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், “பகவான் அய்யப்பனின் ஆன்மிக பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் உறவுகள், தனிமனித மாற்றங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. மிகைப்படுத்தப்பட்ட கதை சொல்லும் முறையை தவிர்த்து, உண்மைத்தன்மை நிறைந்த கதாபாத்திரங்கள், மனதை தொடும் தருணங்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் திரைக்கதையுடன் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்வுகளே இந்த படத்தின் மையமாக இருப்பதால், ‘இருமுடிகட்டு’ திரைப்படம் ரசிகர்களின் மனதில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading