முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது மூத்த மகளின் திருமண அழைப்பிதழ்-ஐ வழங்கிய இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பு!

இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதியரின் மூத்த மகளான அவந்திகாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருமண அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு குஷ்பு மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் நேரில் சென்று வழங்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்யை இரண்டாவது முறையாக இன்று நேரில் சந்தித்து மகளின் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர். இந்த சந்திப்பில் குஷ்புவுடன் அவரது கணவர் சுந்தர் சி, மகள்கள் மற்றும் வருங்கால மருமகனும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து குஷ்பு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு, “எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பானதும் மறக்க முடியாததுமான நாளாக இது அமைந்தது. எங்களது அன்பிற்குரிய சகோதரரும், தமிழகத்தின் முதல்வருமான விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகள் மற்றும் ஷ்ரவண் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினோம். அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் எங்கள் மனம் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பி வழிகிறது. குழந்தைகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். அவரிடமிருந்து தங்களது பார்வையை விலக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியடைந்தனர்.

தனது பிஸியான பணிகளுக்கு மத்தியிலும், எப்போதும் போல அன்பு, அரவணைப்பு மற்றும் அழகான புன்னகையுடன் எங்களை வரவேற்றார். உங்கள் பொன்னான நேரத்திற்கும், அன்பிற்கும், ஆசீர்வாதங்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரா. இந்த சந்திப்பின் மதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், குஷ்பு – சுந்தர் சி தம்பதியினர் திருமண அழைப்பிதழ்களை வழங்கி வந்தாலும், திருமணம் நடைபெறும் தேதி, இடம் மற்றும் மாப்பிள்ளை குறித்த விரிவான தகவல்கள் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading