ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நீதிமன்றங்களில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக கருப்புசாமி களமிறங்கும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நாளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்ற ‘கருப்பு’ திரைப்படம், தொடர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான கலைவாணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “திரைப்படத்தில் இருந்து எந்தவொரு நீண்ட காட்சியும் நீக்கப்படவில்லை. சில கௌரவத் தோற்றங்கள் மற்றும் துணைக் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்த குறுகிய காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த நேரம் 20 முதல் 30 நொடிகள் வரை மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் ஆர்யாவின் கௌரவத் தோற்றம், இரட்டை மருத்துவர் சகோதரர்கள் இடம்பெற்றிருந்த மெட்ரோ காட்சி மற்றும் ‘தி கோட்’ ஜீவா தோன்றிய காட்சி உள்ளிட்டவை திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். “நீக்கப்பட்ட காட்சிகளில் ஆர்யா சாரின் காட்சிதான் மிகவும் நீளமானது. அந்த காட்சி விரைவில் தனியாக ‘Deleted Scene’ வடிவில் வெளியிடப்படும்” என்றும் கலைவாணன் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்யாவின் நீக்கப்பட்ட காட்சியை காண பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
—
