‘பிளாஸ்ட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தமிழகத்தில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுரங்க ஒப்பந்தத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார் தொழிலதிபரான வில்லன் ஜான் கொக்கன். அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் தேனப்பன் ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கேட்கிறார். அந்த பணத்தை வில்லன் பவன் மற்றும் அருண் சிதம்பரம் மூலமாக வழங்க திட்டமிடப்படுகிறது. இந்த பண பரிவர்த்தனை தொடர்பான முக்கியமான சம்பவத்தில் அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் குடும்பம் சிக்கிக் கொள்கிறது. இதனால் பண பரிமாற்றம் தடைபடுகிறது. சாதாரண பள்ளித் தலைமை ஆசிரியரின் குடும்பம்தானே என்று நினைத்து அந்த குடும்பத்தை அழிக்க வில்லன் தரப்பு முடிவு செய்கிறது. ஆனால், அவர்கள் உண்மையில் கராத்தே கலைஞர்களின் குடும்பம் என்பது பின்னர் தெரியவருகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை முழுமையான அதிரடி பின்னணியில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

அர்ஜூன் குடும்பத்தினர் அப்பாவிகள் என்று நினைத்து அணியணியாக வரும் வில்லன்களை, தந்தையான அர்ஜூன், தாயான அபிராமி, மகளான பிரீத்தி முகுந்தன் ஆகியோர் எப்படி எதிர்த்து அழிக்கிறார்கள் என்பதே ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது. வழக்கமாக அர்ஜூன் திரைப்படங்களில் அவர் மட்டுமே சண்டைக் காட்சிகளில் வில்லன்களை வீழ்த்தி குடும்பத்தை காப்பாற்றுவார். ஆனால், இந்த திரைப்படத்தில் மனைவி மற்றும் மகளும் அதிரடி களத்தில் இணைந்து சண்டையிடுவது புதுமையாக இருக்கிறது. அர்ஜூன் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. சண்டைக் காட்சிகளில் வழக்கம்போல அதிரடி காட்டியிருப்பதுடன், தந்தை பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

இதுவரை கவர்ச்சியான மற்றும் இளைய தலைமுறை கதாபாத்திரங்களில் நடித்துவந்த பிரீத்தி முகுந்தன், இந்த திரைப்படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்துள்ளார். அதேசமயம், தன்னிடம் தவறாக நடக்க முயலும் தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளரை காரில் தாக்கும் காட்சி, மருத்துவமனையில் தனது செயினை பறிக்க முயலும் வில்லனை எதிர்த்து சண்டையிடும் காட்சி, வீட்டிற்குள் நுழையும் வில்லன் குழுவினரை எதிர்த்து போராடும் காட்சிகள் போன்றவற்றில் ரசிகர்களின் கைதட்டலை பெற்றுள்ளார். இடைவேளைக்குப் பிறகு அர்ஜூனுடன் இணைந்து அவர் இடம்பெறும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்த திரைப்படம் பிரீத்தி முகுந்தனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அப்பாவியான மற்றும் பாசமிகு தாயாக வரும் அபிராமியும் பின்னர் அதிரடி காட்சிகளில் மிரட்டியுள்ளார். இந்த இருவரின் கதாபாத்திரங்களும், அவர்கள் இடம்பெறும் காட்சிகளும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

முக்கிய வில்லனாக தொழிலதிபர் கதாபாத்திரத்தில் ஜான் கொக்கன் நடித்துள்ளார். அவருடைய நடிப்பில் பெரிய புதுமை எதுவும் இல்லையெனினும், கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். பவன் மற்றும் அருண் சிதம்பரம் உள்ளிட்ட மற்ற வில்லன் கதாபாத்திரங்களும் அவ்வப்போது மிரட்டலான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன. காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திலீபனின் கதாபாத்திரமும் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது.

திரைப்படம் முழுமையான அதிரடி பின்னணியில் உருவாகியிருந்தாலும், இடைவேளை வரை சில சண்டைக் காட்சிகளுடன் அமைதியான முறையில் நகர்கிறது. குறிப்பாக இடைவேளை காட்சி மிகவும் வலிமையாக அமைந்துள்ளது. ஆனால், அதன் பின்னர் திரைப்படம் முழுவதும் தொடர்ந்து சண்டைக் காட்சிகளே அதிகமாக இடம்பெறுகின்றன. ஒரு கட்டத்தில் அது சலிப்பை ஏற்படுத்துகிறது. வில்லன் தரப்பினரும், கதாநாயகன் தரப்பினரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதால், காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. சில இடங்களில் சண்டைக் காட்சிகள் தேவையற்ற வகையில் திணிக்கப்பட்டுள்ளதுபோல் தோன்றுவது திரைப்படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு கேஜிஎப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். பாடல்கள் இடம்பெறவில்லை என்றாலும், சண்டைக் காட்சிகளுக்கு அவர் வழங்கிய பின்னணி இசை பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளின் வீரியத்தை அவரது இசை மேலும் உயர்த்துகிறது. இருப்பினும், சில இடங்களில் பின்னணி இசையின் ஒலி அளவை சற்றுக் குறைத்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது. திரைப்படத்தின் இன்னொரு முக்கிய பலமாக சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு அமைந்துள்ளார். ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் மிகவும் மிரட்டலாக வடிவமைத்துள்ளார். அதேபோல், ஒளிப்பதிவாளர் அருணின் காட்சிப்பதிவும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading