திருமண வயதில் இருக்கும் இரண்டு மகன்கள், தனது 26 வயதிலேயே கணவனை இழந்த தாய்க்கு 42 வயதில் மறுமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு அந்தத் தாய் சம்மதித்தாரா, கிராம மக்களிடமிருந்து என்னென்ன எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் எழுகின்றன, அந்த தடைகளையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறி அந்த திருமணம் இறுதியில் நடந்ததா என்பதையே மையக் கதையாகக் கொண்டு இயக்குநர் சசி இயக்கியுள்ள திரைப்படம் ‘நூறுசாமி’. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதில் தாயாக ஸ்வாசிகா நடித்துள்ள நிலையில், அவரது மகன்களாக அஜய் திஷன் மற்றும் சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ஸ்வாசிகாவை திருமணம் செய்ய வரும் நபராக நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விதவைத் திருமணத்தை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியானுள்ளன. ஆனால், தாயின் மறுமணத்திற்காக மகன்களே போராடும் கதைக்களம் இந்த திரைப்படத்திற்கு தனித்துவத்தை அளிக்கிறது. திருமணத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், இளம் வயதிலேயே கணவனை இழந்த பெண்களின் மனப்போராட்டங்கள், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமதிப்புகள், வலி, வேதனை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பெண்களின் பார்வையில் உணர்வுபூர்வமாக இந்த திரைப்படம் பதிவு செய்கிறது. அதே நேரத்தில், பெண்களின் நிலையை ஆண்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் சிந்திக்க வைக்கும் பல அம்சங்களை முன்வைக்கிறது. அந்த வகையில் செல்வி என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வாழ்ந்திருப்பது போல ஸ்வாசிகா நடித்துள்ளார்.
சிறு வயதிலேயே கணவனை இழந்த ஒரு பெண், கடந்த 17 ஆண்டுகளாக தனது இரண்டு மகன்களுக்காக மட்டுமே வாழ்ந்து, அவர்களை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர போராடுகிறார். விவசாயக் கூலித் தொழிலாளியாகவும், டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவும் வாழ்க்கையை முன்னெடுக்கும் அவர், பொருளாதார மற்றும் மனரீதியான பல சவால்களை எதிர்கொள்கிறார். அவருடைய சொந்த குடும்பமே முழுமையாக துணை நிற்காத சூழ்நிலையிலும் அவர் வாழ்வைப் போராடி முன்னெடுக்கிறார். இந்தக் காட்சிகளில் ஸ்வாசிகா உண்மையான கள்ளக்குறிச்சி கிராமத்து பெண்ணாகவே தோன்றுகிறார். அவரது தோற்றம், கோபத்தை வெளிப்படுத்தும் விதம், தன்னம்பிக்கையுடன் பேசும் உடல்மொழி மற்றும் தனது உணர்வுகளையும் ஆசைகளையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை கதையுடன் ஒன்றிணைக்கின்றன. குறிப்பாக நெருக்கமான காட்சிகள், மறுமணத்திற்கு எதிராக மகன்களுடன் வாக்குவாதம் செய்யும் தருணங்கள், மகன்களை விட்டு பிரிந்தால் அவர்களை யார் கவனிப்பார்கள் என உருக்கமாக அழும் காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனியுடன் பேசும் காட்சிகளில் அவரது நடிப்பு மிகவும் வலிமையாக வெளிப்படுகிறது. அவர் பேசும் வசனங்கள் பல விதவைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை பிரதிபலிக்கும் குரலாக அமைந்துள்ளன. செல்வி என்ற கதாபாத்திரம் திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மூத்த மகனாக நடித்துள்ள அஜய் திஷனும், இளைய மகனாக நடித்துள்ள சக்தியும் தங்களது கதாபாத்திரங்களுக்கு வலுசேர்த்துள்ளனர். அவர்களது காதல் காட்சிகள் கதையின் சுமையை குறைக்கும் இலகுவான தருணங்களாக அமைகின்றன. ஸ்வாசிகாவின் அண்ணனாக நடித்துள்ள கருணாஸ் பாசமிக்க மனிதராக தோன்றுவதுடன், கிளைமாக்ஸுக்கு முன்பாக வேறொரு முகத்தையும் வெளிப்படுத்துகிறார். வில்லனாக நடித்துள்ள பாலாஜி சக்திவேல், அஜய் திஷனின் காதலியின் தந்தையாக நடித்துள்ள பக்ஸ் மற்றும் தாயாக நடித்துள்ள வினோதினி ஆகியோரின் நடிப்பில் சில இடங்களில் செயற்கைத்தன்மை காணப்படுவது திரைப்படத்தின் வேகத்தை சற்று பாதிக்கிறது. லிஜோ மால் குறுகிய நேர காட்சிகளில் தோன்றினாலும், தனது கதாபாத்திரத்தின் மூலம் சில முக்கியமான கருத்துகளை பதிவு செய்கிறார்.
திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட கவுரவத் தோற்றம் போன்றதாக அமைந்துள்ளது. இடைவேளைக்குப் பிறகு அவர் திரையில் தோன்றினாலும், அவரது அறிமுகக் காட்சி, இயல்பான பேச்சு, எளிமையான அணுகுமுறை மற்றும் மனிதநேயமான செயல்பாடுகள் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைகின்றன. ஒளிப்பதிவாளர் தர்ஷன், ஒரு கிராமத்தின் வாழ்க்கை முறையையும், ஒரு குடும்பத்தின் அன்றாட போராட்டங்களையும் மிகவும் யதார்த்தமாக பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையில் இடம்பெற்றுள்ள ‘அம்மா அம்மா’ மற்றும் ‘மாயகனவோ’ பாடல்கள் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன.
‘நூறுசாமி’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வசனங்களாகும். குறிப்பாக ஸ்வாசிகாவின் மனசாட்சியாகவும், உள்ளுணர்வாகவும் ஒலிக்கும் வசனங்கள் பார்வையாளர்களின் மனதை ஆழமாகத் தாக்குகின்றன. சிறுவயதிலேயே கணவனை இழந்த பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சவால்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் மன வேதனைகளை சிறிய சிறிய வசனங்களின் மூலம் மிகத் தாக்கமிக்க வகையில் இயக்குநர் சசி பதிவு செய்துள்ளார். திரைப்படத்தில் எழுப்பப்படும் கேள்விகளும், பகிரப்படும் கருத்துகளும் பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் வகையில் அமைந்துள்ளன. ஸ்வாசிகாவின் வீடு, கிராம சூழல், அங்குள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் பேச்சுவழக்குகள் அனைத்தும் மிகவும் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
