தமிழில் ‘பாரதி’, ‘தூள்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட அவர், தென்னிந்திய மொழிகள் உட்பட சுமார் எட்டு மொழிகளில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார் என்ற தகவலும், இதுவரை சுமார் 6.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்ற ஆச்சரிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
தன்னுடைய தாயின் இறுதி மூச்சை தன்னால் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், தாயின் சுவாசம் இந்த உலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் சாயாஜி ஷிண்டேவுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, தனது தாயின் உடல் எடைக்கு சமமான அளவில் விதைகளை சேகரித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் அவற்றை விதைத்து மரங்களாக வளர்த்து வருகிறார்.
ஆரம்பத்தில் தனது சொந்த கிராமத்தில் சுமார் 2000 மரக்கன்றுகளை நட்டதன் மூலம் தொடங்கிய இந்த முயற்சி, இன்று ‘சஹ்யாத்ரி தேவராபி’ என்ற தொண்டு அமைப்பாக வளர்ந்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவின் 48 முக்கிய பகுதிகளில் இந்த மரக்கன்று நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது வெறும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக மட்டுமல்லாமல், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் பணியாக மாறியுள்ளது என்றும் சாயாஜி ஷிண்டே தெரிவித்துள்ளார்.
