இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன் சர்ஜா, அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை நகரில் திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன், “இந்த திரைப்படத்தில் என்னைப் போலவே அபிராமியும் சண்டைக் காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல், சிறந்த நடனக் கலைஞராக அறியப்படும் ப்ரீத்தி முகுந்தன், இனிமேல் சிறந்த சண்டைக் கலைஞராகவும் அழைக்கப்படுவார். திரைப்படத்தை பார்த்தவர்கள் பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் நடித்த அனைவருக்கும் மிகவும் சிறப்பான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “பெண்கள் தைரியமாக எதிர்த்து போராட வேண்டும் என்ற கருத்தை இந்த திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறது. தற்போதைய சமூக சூழலில் பெண்களை இப்படிப்பட்ட தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த திரைப்படம் ஏற்படுத்தும். நானும் என்னுடைய மகளை அதுபோலத்தான் வளர்த்தேன். எங்கு அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும் என்ற கருத்தை இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது. எதிர்காலத்தில் பள்ளிகளில் தற்காப்புக் கலை ஒரு பாடமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ‘முதல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது பற்றி தற்போது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘முதல்வன்’ திரைப்படத்துடன் தற்போதைய ஆட்சியை ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் திரைப்படத்தில் முதல்வனாக நடித்தவன். எனது நண்பரான முதலமைச்சர் விஜய் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் நிச்சயமாக மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான அறிகுறிகள் தற்போது தெரிகின்றன. அதற்காக அவருக்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், சனாதனம் குறித்து பேசிய அர்ஜூன், “சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை. தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, திருடக்கூடாது, பிறர் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது போன்ற பல நல்ல விஷயங்களை அது எடுத்துரைக்கிறது. சிறு வயதில் பெற்றோர் நம்மை எவ்வாறு அன்புடன் வளர்த்தார்களோ, அதேபோல் வயதான காலத்தில் பெற்றோரை கடவுளைப் போல மதித்து கவனிக்க வேண்டும் என்பதையும் சனாதனம் கூறுகிறது. சனாதனம் இருக்கக்கூடாது என்று கூறினால், பெற்றோரை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். அது தேவையா? சனாதனம் என்பது மதம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்பதை நான் புரிந்துகொண்டேன். அதைப் போல மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
