ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள், கிரிக்கெட் மற்றும் மல்யுத்தம் ஆகிய இரண்டு விளையாட்டுகளை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளனர். அதேசமயம், மல்யுத்த விளையாட்டிற்கே இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பே விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது ராம்சரணின் நீண்டநாள் கனவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, ‘தூள்’, ‘கில்லி’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் தரணி இயக்கத்தில், கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு ‘மெருபு’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்காக சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால் பின்னர் சில காரணங்களால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.
அப்போது என்ன நடந்தது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் ராம்சரண் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அந்த காலகட்டத்தில் நாங்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து படம் எடுக்க முயன்றோம். ஆனால் அப்போது இருந்த கேமரா மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள், அந்த விளையாட்டை மிகப்பெரிய அளவில் மற்றும் தரமாக திரையில் கொண்டு வர போதுமானதாக இல்லை. அதனால் அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அது முழுமையாக கைவிடப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் புச்சி பாபு சனா கூறுகையில், “அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டதை ராம்சரண் மிகவும் வருத்தத்துடன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். அவர் விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்பதே அவரது கனவு என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதன்பிறகு நான் இந்தக் கதையை உருவாக்கி அவரிடம் கூறியவுடன், அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். பாதியில் நின்ற அவரது அந்த கனவை ‘பெத்தி’ திரைப்படத்தின் மூலம் நான் நிறைவேற்றியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
