இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் 10வது திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனுடன், இளையராஜாவின் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் இசைப் பணிகளில் கார்த்திக் சுப்பராஜ் கலந்துகொண்ட காட்சிகளைக் கொண்ட ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது. அந்த பதிவில் கார்த்திக் சுப்பராஜ், “ஒரு கனவு, ஒரு ஆசி” என்ற ஒரே வரியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளத்தில் நீண்ட மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் 10வது திரைப்படம் என் மனதிற்கும் இதயத்திற்கும் மிகவும் நெருக்கமான கதை. ‘மகான்’ திரைப்படத்திற்குப் பிறகு உடனடியாக நான் உருவாக்க வேண்டும் என்று விரும்பிய படம் இதுதான். நான் எப்போதும் நம்புவது என்னவென்றால், ஒரு கதை தன்னுடைய கதை சொல்லியைத் தானே தேர்ந்தெடுக்கிறது. அதேபோல், அதை சொல்ல வேண்டிய நேரத்தையும் அந்தக் கதையே முடிவு செய்கிறது. இந்தக் கதையும் தன்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டது. தற்போது சரியான மனிதர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.
சரியான தயாரிப்பாளர்களாக குனீத் மொங்கா மற்றும் அசின் ஜெயின் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே என் கற்பனையையும் பார்வையையும் அவர்கள் முழுமையாக புரிந்துகொண்டனர். இப்போது என் கனவு, அவர்களுடைய கனவாகவும் மாறியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படத்தை காட்டுவதற்காக நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
ஜோதி தேஷ்பாண்டே, ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆசீர்வாதம் என்னவென்றால், ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா இந்த படத்திற்கு இசையமைப்பதுதான். இது அவருடைய 1540வது திரைப்படமாகும். நான் இளையராஜா சார் இசையோடு வளர்ந்தவன். என் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு உணர்ச்சியும் — மகிழ்ச்சி, சோகம், காதல், கோபம், இரக்கம், பாசம், உந்துதல் — எல்லாவற்றுக்கும் பின்னணியில் அவருடைய இசை இருக்கிறது. அவர் எனக்கு ஒரு வாழ்க்கை முறை போன்றவர். நம்மில் பலருக்கும் அதே உணர்வே இருக்கும் என்று நம்புகிறேன்.
எப்போதுமே அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது. ஆனால், முந்தைய படங்களுடன் அவரை அணுகுவதற்கு எனக்கு தைரியம் வரவில்லை. இந்தப் படத்தின் முதல் கட்ட எடிட்டிங் முடிந்ததும், அதை ராஜா சாரிடம் காட்ட வேண்டும் என்று தோன்றியது. அவர் கண்டிப்பாக இந்த படத்தை ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்பினேன். அவர் படத்தை பார்த்து மிகவும் விரும்பினார். அடுத்த நாள் காலையிலிருந்தே இசைப் பணிகளை தொடங்கலாம் என்று கூறினார். அதன் பிறகு கடந்த 25 நாட்கள், ‘ராகதேவன்’ உடன் நான் இருந்தது ஒரு ஆனந்தமான மற்றும் ஆன்மிகமான பயணமாக மாறிவிட்டது.
ஒரு இதிகாசம் போல இசை உருவாகும் அந்த தருணங்களை நேரில் பார்ப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம். பாடல்களைத் தவிர, இந்தப் படத்தின் பின்னணி இசையை தனி ஆல்பமாக படம் வெளியாகும் முன்பே வெளியிட வேண்டும் என்று ராஜா சார் கூறியுள்ளார். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த இசையை நீங்கள் அனைவரும் கேட்டு, உணர்ந்து, அதில் மூழ்கப்போகும் தருணத்தை நினைத்தாலே எனக்கு மிகுந்த ஆவலாக இருக்கிறது” என்று கார்த்திக் சுப்பராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
