பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘தேன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘அருள்வான்’. அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ், விடிவி கணேஷ், பேபி கிருத்திகா, காளி வெங்கட், சரவணன், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ளார். சுபா சரவணன் இணை தயாரிப்பாளராக உள்ளார். இப்படம் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் விநாயக், ‘தேன்’ திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் எஸ்.ஜி. சரவணன் தன்னை பாராட்டியதோடு, இணைந்து படம் தயாரிக்க விருப்பம் தெரிவித்ததிலிருந்தே ‘அருள்வான்’ உருவானதாக கூறினார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது கனவை அடைய எதிர்கொள்ளும் போராட்டத்தை உணர்வுபூர்வமாக இப்படம் பேசும் என்றும், இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும் தெரிவித்தார்.
அருள்நிதியுடன் இது இரண்டாவது கூட்டணி என்றும், ‘தகராறு’ படத்திற்குப் பிறகு நல்ல கதைக்காக காத்திருந்த அருள்நிதியிடம் இந்தக் கதையை கூறியவுடன், “கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. இதுபோன்ற கதையை நாம் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்வார்கள்?” என்று கூறி உடனே நடிக்க சம்மதித்ததாக இயக்குநர் தெரிவித்தார். இப்படத்தில் அருள்நிதி மாவட்ட ஆட்சியர் முத்துவேல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ‘வான்’ என பெயரிட திட்டமிட்டிருந்தாலும், அந்த தலைப்பு கிடைக்காததால் ‘அருள்வான்’ என மாற்றியதாகவும் கூறினார்.
கல்விக்காக போராடும் சிறுமியாக சின்னத்திரை நடிகை கிருத்திகா நடித்திருப்பதாகவும், அவரது நடிப்பை பார்த்து ஆடிஷன் நடத்தி தேர்வு செய்ததாகவும் இயக்குநர் தெரிவித்தார். படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருப்பதால், படம் வெளியான பிறகு தேசிய விருதுக்கே தகுதியான நடிப்பாக அனைவராலும் பாராட்டப்படுவார் என்ற நம்பிக்கையையும் இயக்குநர் கணேஷ் விநாயக் வெளிப்படுத்தினார்.
