சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் படக்குழுவினருக்கு நடிகர் கமல் ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஜஸ்வந்த் பண்டாரிக்கும் இடையே ஏற்பட்டிருந்த நிதி தொடர்பான பிரச்னை காரணமாக திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை என தகவல்கள் வெளியானது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு, தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “தம்பி சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டில் இருந்த அனைத்து பிரச்னைகளும் சுமுகமாக தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
