தனுஷ் நடித்த ‘வாத்தி’ மற்றும் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா தற்போது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இது சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இந்த திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டிலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. வயதில் மூத்த ஒருவரை இளம் பெண் ஒருவர் துரத்தி துரத்தி காதலிப்பது போன்ற கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக டீசரிலேயே காட்டப்பட்டிருந்தது. நடிகர் சூர்யாவை காதலிக்கும் பெண்ணாக நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். இதற்கிடையில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
