பிரபல இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக இந்திய திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த பாக்யராஜ், 73 வயதில் மாரடைப்பால் இன்று (ஜூன் 27) காலை சென்னையில் காலமானார். கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பியிருந்த அவர், இன்று காலை திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய சினிமாவில் “திரைக்கதை மன்னன்” என்ற பெருமையை பெற்றிருந்த பாக்யராஜ், நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்தவர். தனித்துவமான கதைக்களங்கள், நகைச்சுவை கலந்த குடும்பக் கதைகள் மற்றும் வித்தியாசமான திரைக்கதை அமைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தார்.
இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிவப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பணியாற்றினார். பின்னர் ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘மௌன கீதங்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘முந்தானை முடிச்சு’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். அதேபோல் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா மறைந்த நிலையில், அதற்கு 20 நாட்களுக்குள் அவரது சீடரான பாக்யராஜும் உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையிலிருந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரையுலகினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜின் இறுதிச்சடங்கு நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
