தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ராம் சரண் நடித்த கடைசி திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய அந்தப் படத்திற்குப் பிறகு, அடுத்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற உறுதியுடன் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவ ராஜ்குமார், ‘மிர்சாபூர்’ தொடரின் மூலம் பிரபலமான திவ்யேந்து, நடிகர் ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்காக நடிகை ஸ்ருதிஹாசன், ராம் சரணுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
உள்ளூர் விளையாட்டு பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்காக, தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றிய புகைப்படங்களை ராம் சரண் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை “இந்தியாவின் ஹல்க்” என்று பாராட்டினர். ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்கிரி’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் வருகிற ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
