பசில் ஜோசப், டொவினோ தாமஸ் மற்றும் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அதிரடி’. இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் அனிருத்தன் இயக்கியுள்ளார். இவர் ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை அனந்து மற்றும் சமீர் ஆகியோருடன் இணைந்து நடிகர்கள் பசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகர்களான பசில் ஜோசப், டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர்-நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்து நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சமீப காலமாக பசில் ஜோசப் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் வெற்றியடைந்த ‘லோகா’ திரைப்படத்தில் டொவினோ தாமஸ் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘அதிரடி’ திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது ‘அதிரடி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
