தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பிரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்ட நிலையில், அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்த பாடலில் ஜேசன் சஞ்சய் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியிருந்தது ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. தற்போது திரைப்படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
வரும் 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘சிக்மா’ திரைப்படத்திற்காக நடிகர் சந்தீப் கிஷன் தனது டப்பிங் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்ட நிலையில், அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால், ‘சிக்மா’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
