தமிழ் சினிமாவில் ‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் அதர்வா, சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், நிஹாரிகா மற்றும் ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‘பாய்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு முழுமையாக இசையமைப்பில் கவனம் செலுத்தி வந்த தமன், தற்போது ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிகராக திரையுலகிற்கு திரும்பியுள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி, முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வரும் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் கட்டழகி பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
