லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். மேலும், ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU)’ என்ற புதிய முயற்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘கூலி’ திரைப்படமும் வெளியாகி கவனம் பெற்றது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும், லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளன. இதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ‘டிசி’ திரைப்படம் வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநராக வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ், நடிகராக முழுநீள கதாபாத்திரத்தில் எப்படி ரசிகர்களை கவரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading