தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இயக்குநரின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
