‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘29’. இந்தப் படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் வரும் 8ஆம் தேதி வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மற்றும் கதையின் சாரம் குறித்து நடிகை பிரீத்தி அஸ்ராணி விளக்கமளிக்கையில், “இந்தப் படத்தில் நான் ‘விஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது ஒரு காதல் கதை. இதில் 29 வயதுடைய சத்யா மற்றும் 21 வயதுடைய விஜி ஆகியோரின் வாழ்க்கை மையமாகிறது. இந்த வயது வித்தியாசம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. 21 வயதான விஜி வாழ்க்கையைப் பற்றிய தெளிவான புரிதலுடன், அடுத்தடுத்த முடிவுகளை சிந்தித்து செயல்படும் ஒரு பெண். அவளுக்கு வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நோக்கம் உள்ளது.
ஆனால் சத்யா என்ற கதாபாத்திரத்திற்கு தெளிவான இலக்கு எதுவும் இல்லை; விஜியே அவனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக மாறுகிறது. நம் வாழ்க்கையில் ஒருவரின் வருகை எவ்வாறு மாற்றத்தை உருவாக்குகிறது என்பதையே இந்த கதை எடுத்துக்காட்டுகிறது. அதுபோல சத்யாவின் வாழ்க்கையில் விஜி மாற்றத்தை ஏற்படுத்துகிறாள். இந்தக் காதல் கதையை பார்க்கும் போது, பலரும் தங்களது வாழ்க்கையுடன் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும். இது சத்யா மற்றும் விஜியின் அழகான வாழ்க்கைப் பயணமாக அமைந்துள்ளது.
எனக்கு எப்போதும் இயல்பான, உண்மையான, அடுத்த வீட்டுப் பெண்ணைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அது கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், திரையில் வெளிப்படுத்துவது சிரமமான ஒன்று. இவ்வாறான சவாலான கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தக் கதை 2010ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. அக்காலத்திய காதல் எளிமையானதும், அப்பாவித்தனமானதும், நேர்மையானதும் ஆக இருக்கும். அதனை நாங்கள் உணர்ந்ததுபோலவே, படத்தை பார்க்கும் பார்வையாளர்களும் உணர்வார்கள். காட்சிகளும் வசனங்களும் அனைத்தும் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளன. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி. ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தபோதிலும், என்னை நம்பி ஊக்கமளித்த அவருக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
—
