ஜான் ஈ மன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அந்த படம் வெற்றியடைந்ததுடன், அதன் கதை அமைப்பிற்காகவும் பரவலான கவனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக தமிழில் மட்டுமே இந்த படம் ரூ.60 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. உலகளவில் மொத்தமாக ரூ.225 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் தற்போது பாலன் தி பாய் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதையை ஜித்து மாதவன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார், சிஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் முழுமையாக புதிய நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாலன்’ என்பது மலையாள சினிமாவின் முதல் ஒலிப்படமான (1938) படத்தின் பெயராகவும் அமைந்துள்ளது. மேலும், விகதகுமாரன் மற்றும் மார்த்தாண்ட வர்மா ஆகிய படங்களுக்கு பிறகு மலையாளத்தில் வெளிவந்த மூன்றாவது திரைப்படமாகவும் அது அறியப்படுகிறது.
இந்த நிலையில், பாலன் தி பாய் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி கேன்ஸ் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட உள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
