தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்கிய ஆர்பி சவுத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட அவர், ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து சாதனை படைத்தவர். தமிழில் அவர் தயாரித்த முதல் திரைப்படம் ‘புது வசந்தம்’ ஆகும். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் 99வது படமான ‘மகுடம்’ படத்தையும் அவர் தயாரித்து வந்தார். விரைவில் அவரது தயாரிப்பில் 100வது படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, அவர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘புது வசந்தம்’, ‘புரியாத புதிர்’, ‘சேரன் பாண்டியன்’, ‘ஊர் மரியாதை’, ‘கோகுலம்’, ‘கேப்டன்’, ‘நாட்டாமை’, ‘பூவே உனக்காக’, ‘சூர்யவம்சம்’, ‘சொல்லாமலே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘நீ வருவாய் என’, ‘ஆனந்தம்’, ‘சமுத்திரம்’, ‘ஷாஜகான்’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்கள் அவரது தயாரிப்பில் உருவாகியுள்ளன. குறிப்பாக இயக்குநர்கள் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோருடன் இணைந்து தயாரித்த படங்களும், நடிகர்கள் சரத்குமார் மற்றும் விஜய் நடித்த படங்களும் பெரும் வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கிய தயாரிப்பாளராகவும் அவர் அறியப்பட்டார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்ததோடு மட்டுமின்றி, பல படங்களை விநியோகித்தும் வந்தார். ஆரம்ப காலத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட அவர், பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தயாரிப்புத் துறையில் முழுமையாக நுழைந்தார். தயாரிப்பு மற்றும் விநியோகம் தவிர்த்து, பிற படங்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி வந்தார். அவரது மகன்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோரும் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக உள்ளனர்.
—
