அஸ்வின்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘மகா அவதார் நரசிம்மா’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட வசூலை ஈட்டி பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த அனிமேஷன் படத்தில் சாம் சி.எஸ். அமைத்த இசை ரசிகர்களிடையே சிறப்பாக பேசப்பட்டது. ‘மகா அவதார்’ தொடர் படங்களின் அடுத்த பகுதியாக உருவாகும் ‘மகா அவதார் பரசுராம்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தைப் பற்றிப் படக்குழுவினர் தெரிவித்தபோது, “சாம் சி.எஸ். தனது வழக்கமான பணிமுறையை மாற்றி, இந்தக் கதைக்கான இசையை முன்கூட்டியே உருவாக்கி முடித்துள்ளார். அதன் அடிப்படையில், அந்த இசைக்கு ஏற்ப அனிமேஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினர். இது திரைப்பட தயாரிப்பில் ஒரு புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தில் உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக்கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இப்படியான பிரமாண்ட அணியுடன் இணைந்து, சாம் சி.எஸ். தனது இசையை உலகத் தரத்திற்கு இணையாக வடிவமைத்து வருகிறார்.
பின்னணி இசையில் தனித்துவம் காட்டி வரும் சாம் சி.எஸ்., பாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கும் தீவிரமாக இசையமைத்து வருகிறார். தமிழில் ரவிமோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார் 2’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், அடுத்து புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் எச்.வினோத் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.
—
