சரண் இயக்கத்தில், பரத்வாஜ் இசையமைப்பில், அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்டோர் நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித்தை ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்திய இப்படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில்தான் அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்படத்தை தற்போது டிஜிட்டல் தரத்தில் மெருகேற்றி, வரும் ஏப்ரல் 24ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், அதன் First Copy-யை இயக்குநர் சரண் பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில், “நேற்று ‘அமர்க்களம்’ டிஜிட்டல் First Copy-யை பெரிய திரையில் பார்த்தபோது மிகவும் பிரமித்தேன். ஸ்பாரோ சினிமாஸ் கார்த்திக்கின் அர்ப்பணிப்பு வேற லெவலில் இருந்தது. பிரசாத் இஎப்எக்ஸ் குழுவின் தொழில்நுட்ப வேலை அற்புதமாக இருந்தது. அஜித்தின் நடிப்பு, ஷாலினியின் அழகிய தருணங்கள் அனைத்தும் மனதை கவர்ந்தது. நான் என்னையே மறந்து ரசித்தேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
—
