‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் இயக்கி, தானும் நடித்து வரும் படம் ‘அன்பே டயானா’. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இதில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு, தெலுங்கு இளைஞன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கிடையேயான கலாச்சார வேறுபாடுகளை தாண்டிய காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.
பெரம்பூரில் அமைந்துள்ள ‘ஐசிஎப்’ (ரயில் பெட்டி தொழிற்சாலை) வளாகத்தில் முதல்முறையாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக இயக்குநர் பாரி இளவழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வடசென்னை என்றாலே கொண்டாட்டங்கள் நிறைந்த பகுதி. நான் கடந்த 15 ஆண்டுகளாக பெரம்பூரில் வசித்து வருகிறேன். இது சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். பெரம்பூரில்தான் ரயில்வேயின் ஐ.சி.எப் அமைந்துள்ளது. மேலும், மூன்று ரயில் நிலையங்களும் இங்கு உள்ளன. இதைத் தவிர, பெரம்பூரின் கலாச்சாரம் மிகவும் விரிவாகவும் பல்வகை தன்மையுடனும் காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து ஆங்கிலோ இந்தியர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அதோடு, தெலுங்கு மற்றும் இந்தி பேசும் மக்களும் இங்கு அதிகமாக வசித்து வருகின்றனர்.
இந்தச் சூழல் என்னை மிகவும் ஈர்த்ததால், இந்தக் கதையை முழுவதுமாக பெரம்பூரை மையமாகக் கொண்டு எழுதியேன். அதே இடங்களில் படப்பிடிப்பையும் நடத்தினேன். ரயில்வே தொழிற்சாலையான ஐ.சி.எப் வளாகத்தில் இதற்கு முன்பு எந்த திரைப்படமும் படமாக்கப்படவில்லை. அதனால், முதல்முறையாக அங்கு படப்பிடிப்பு நடத்துவது ஒரு முக்கிய அனுபவமாக இருந்தது. ஒரு தெலுங்கு இளைஞன், ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை காதலிக்கிறான். அந்தக் காதல் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? அது நிறைவேறுகிறதா? திருமணத்தில் முடிகிறதா? என்பதே இப்படத்தின் மையக் கதை என அவர் தெரிவித்துள்ளார்.
—
