இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரமின் 63வது திரைப்படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், அதே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, ‘96’ திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது 2016ஆம் ஆண்டு வெளியான ‘இருமுகன்’ திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் 63வது திரைப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதனுடன், இப்படத்தின் அறிவிப்பு காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு காணொளியில், ஒரு அறைக்குள் அமர்ந்திருக்கும் விக்ரமை சுற்றி வில்லன்கள் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர் மிகவும் அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் அமர்ந்திருக்கும் தோற்றம் ரசிகர்களை கவர்கிறது. மேலும், அவருக்கு வலுவான முன்னோட்டத்தை வழங்கும் வகையில் ‘அவன் சமையல் காரன், ஆனா சம்பவ கை’ என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.
