‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை என்னால் இயக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான் -இயக்குனர் செல்வராகவன்!

கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய கவனத்தை பெற்றது. இந்த திரைப்படத்தை ஆரம்பத்தில் இயக்குவதற்காக செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்தப் படத்தை இயக்க முடியாமல் போனது. தற்போது தனது நடிப்பில் வெளியாகியுள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் தொடர்பாக பேட்டி அளித்து வரும் செல்வராகவனிடம், தாம் இயக்க முடியாமல் போனதில் வருத்தம் அளித்த திரைப்படம் எது எனக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அதில் தடைகள் எதுவும் இல்லை, ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது. அதை வெளியில் கூறினால் அது ஆச்சரியமாக இருக்கும். ஒருவர் தனது கதைக்கு நேர்மையாக இருந்தால், அந்த நிலைமை அவருக்கே புரியும். சில சமயம் பிரிவுகள் நம்மால் ஏற்படும்ஒ சில சமயம் மற்றவர்களால் ஏற்படும். ஆனால் அது நடைபெறாததை நினைத்து நான் பெரிதாக வருந்தவில்லை. மாறாக ‘நிம்மதியாக இருக்கிறேன்’ என்ற உணர்வே ஏற்பட்டது. சில சமயம் கதையில் இருந்த சில கதாபாத்திரங்கள் பின்னர் பயன்படுத்தப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைத் தாண்டி நான் சென்றுவிட்டேன்.

ஆனால் எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது என்றால் அது , ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை நான் இயக்க முடியாமல் போனதே அந்த வருத்தம். அது கமல்ஹாசன் அவர்களின் கதை என்றாலும், அது என்னுடைய கண்ணோட்டத்தில் உருவாகியிருந்தால் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும் என்ற ஒரு சிறிய ஆசை இருந்தது. அந்தக் கதை மிகவும் வலுவானது. அதை நான் தனித்துவமான முறையில் அணுகியிருக்க முடியும். எல்லைகளைத் தாண்டி இருக்கும் வாழ்க்கையை அது வெளிப்படுத்தியிருக்கும். நாம் பொதுவாக எதிர்மறையாக நினைக்கும் விஷயங்களுக்கு அப்பால் இருக்கும் மனிதர்களின் உண்மையான வாழ்க்கையையும் காட்டியிருக்கும்.

எதிரிகள் என்று நாம் கருதும் மனிதர்கள் கூட வேறொரு கோணத்தில் பார்க்கும்போது மாறுபட்டவர்களாக இருப்பார்கள். நாம் தினமும் எதிர்மறையாகக் கேள்விப்படும் இடங்களுக்கு நேரில் சென்றால், அங்கேயுள்ள மனிதர்கள் அன்பாக நடந்து கொள்வதை காணலாம். அந்த உண்மைகளை அந்தக் கதை வெளிப்படுத்தியிருக்கும். அப்போது அந்தப் படத்தின் பெயர் ‘கான்’ என்று இருந்தது; ‘விஸ்வரூபம்’ அல்ல. அது உருவாகியிருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் உள்ளது. நான் சொல்ல விரும்பிய கருத்து முழுமையாக வெளிப்படவில்லை என்பதே என் வருத்தம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading