ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளால் வெளியாகாமல் இருந்த நிலையில், நேற்று முழு திரைப்படமும் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த படம் லீக் ஆன விவகாரம் குறித்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர். முன்னதாக, இப்படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே தனது ஆதரவை படக்குழுவிற்கு வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மமிதா பைஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புள்ள ரசிகர்களுக்கு… ஒரு திரைப்படம் உருவாகும் பின்னணியில், தினமும் தங்களின் முழு உழைப்பையும் அர்ப்பணிக்கும் எண்ணற்ற கலைஞர்களின் கடின உழைப்பும், ஆர்வமும், அர்ப்பணிப்பும் அடங்கியுள்ளன.
ஒரு திரைப்படம் சட்டவிரோதமாக பகிரப்படுவது உண்மையில் மிகவும் வருத்தமளிக்கிறது. சில தருணங்கள், அவை உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கேற்ப, திரையரங்குகளில் பெரிய திரையில் அனைவருடனும் இணைந்து அனுபவிக்கப்பட வேண்டியவை. திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது, அதை முறையாக திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும். தயவுசெய்து திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள். சினிமாவையும், அதன் பின்னால் உழைக்கும் ஒவ்வொருவரையும் பாதுகாக்க அதுவே ஒரே வழி என தெரிவித்துள்ளார்.
