தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காக்கா முட்டை’, ‘தர்மதுரை’, ‘ரம்மி’, ‘கனா’, ‘சாமி 2’, ‘வடசென்னை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார். இதில் இளம் நடிகரான திருவீர் கதாநாயகனாக நடித்துள்ளார்.மேலும், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் அவர் ‘தாமினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமப்புற பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு சி.ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார்.இந்நிலையில், ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
