மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு வீரராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் 75 கோடி ரூபாய் வரை வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவின. எனினும், அதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
‘பைசன்’ படம் வெளியானதிலிருந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது துருவ் விக்ரம் புதுமுக இயக்குநரான கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரண் அரவிந்த் குமார், ஏற்கனவே துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த புதிய படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
