நடிகர் பிரசாந்தின் பிறந்தநாள் விழா இன்று சென்னை நகரில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் எஸ். தாணு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் சரண் ஆகியோர் இணைந்து அந்த படத்தின் தலைப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தில் ‘ரஞ்சன்’ என்ற தலைப்பு கதாபாத்திரத்தில் வக்கீலாக பிரசாந்த் நடிக்கிறார். மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி மற்றும் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ஆகியோர் இளம் காதல் ஜோடிகளாக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த விழாவில் நடிகர் விஷாலும் கலந்து கொண்டு பிரசாந்தையும் படக்குழுவினரையும் வாழ்த்தினார். அவர் பேசுகையில், சிறுவயதிலிருந்தே ரசித்த நடிகர் பிரசாந்த் என்றும், அவருக்கு பெருமளவில் ரசிகைகள் இருந்ததாகவும் கூறினார். தயாரிப்பாளர் சங்கத்தில் தன்னுடன் பணியாற்றிய கதிரேசனின் மகன் ஹரி தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் போது தேவயானி நடித்த தொடர்களை மக்கள் விரும்பிப் பார்ப்பதை கண்டுள்ளேன் என்றும், அவரது மகள் பிரியங்காவுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ஹாப்பி ராஜ்’ படம் ஆந்திர மாநிலத்திலும் வரவேற்பைப் பெற்றதாகவும், அவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும், தெலுங்கில் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி அப்பல்லா நடித்த ‘கோர்’ திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் ரீமேக் உரிமையை பெற்ற தியாகராஜன் அதை இயக்கி தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகை தேவயானி பேசுகையில், “என் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய தியாகராஜனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ‘அப்பு’ படத்தில் பிரசாந்துடன் நடித்தபோது, என் மகள் அவருடைய நிறுவனத்தில் அறிமுகமாகுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் மகள் கடுமையாக உழைத்து, நீங்கள் எதிர்பார்ப்பது போல ஒரு சிறந்த நடிகையாக உருவெடுப்பார்” என்று கூறினார். மேலும், பிரியங்காவின் அக்கா இனியாவும் தன் சகோதரிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தேர்வு ஒன்றை எழுதி முடித்தவுடன் அவளை வாழ்த்துவதற்காக விரைந்து வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
