‘கான்சிட்டி’ திரைப்படத்தில் சரவணா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ்!

நடிகர் அர்ஜுன் தாஸ், தமிழ் திரைப்பட உலகில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றவர். அதன் பின்னர் கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவர், ‘அநீதி’, ‘ரசவாதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நடித்த ‘போர்’, ‘ரசவாதி’, ‘பாம்’ போன்ற படங்கள் விமர்சகர்களிடையே கலவையான கருத்துக்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘புதிய’கான்சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். மேலும், வடிவுக்கரசி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். நகரத்தில் வாழும் ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வுகளையும் வாழ்க்கைச் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு இந்தக் கதை அமைந்துள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களையும் கவரக்கூடிய படமாக இது இருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மங்களூரு, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. ‘கான்சிட்டி’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும், இப்படத்தின் ஒலி உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளதுடன், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘கான்சிட்டி’ படத்தின் தலைப்பு அறிமுக டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த டீசரில், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் தருணத்தில், ஒரு பொத்தானை அழுத்தினால் பணம் வெளியேறும் வினோதமான இயந்திரம் அவரது கையில் கிடைக்கிறது. அந்த இயந்திரம் அவருக்கும், அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் கிடைத்த பின்னர் ஏற்படும் மாற்றங்களும் சம்பவங்களும் தான் கதையின் முக்கிய அம்சமாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த டீசர் வெளியானதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘கான்சிட்டி’ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், அர்ஜுன் தாஸ் ‘சரவணா’ என்ற கதாபாத்திரத்தில், அன்னா பென் ‘மித்ரா’ என்ற கதாபாத்திரத்தில், யோகி பாபு ‘ஜாக்கி’ என்ற கதாபாத்திரத்தில், வடிவுக்கரசி ‘ஜானகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு முன்பாகவே, இப்படத்தில் நடித்துள்ள பொன்வண்ணன், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, மதன், தம்பி ராமையா, ரமேஷ் திலக், ராதாரவி, ஷாஜி சென், தீபா ராமானுஜம், விடிவி கணேஷ், அருள் தாஸ் மற்றும் கன்னட நடிகர் நந்தகோபால் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படம் கோடை வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading