சாய் அபயங்கர் உருவாக்கிய ‘கட்சி சேர’ என்ற இசை ஆல்பம் 2023ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப் பாடலில் சம்யுக்தா விஸ்வநாதன் ஆடிய நடனம் பெரிதும் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வெளியான சுழல் 2 தொடரில் சம்யுக்தா நடித்திருந்தார். தற்போது மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘டபுள் ஆக்குபன்சி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது குறித்து சம்யுக்தா விஸ்வநாதன் கூறுகையில், “நான் நடிக்கும் திரைப்படங்களின் கதையை முன்கூட்டியே சொல்ல விரும்புவதில்லை. ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அனுபவிப்பதே சிறந்தது. ‘கட்சி சேர’ பாடல் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இன்றும் நான் எங்கு சென்றாலும் அந்தப் பாடலின் ஸ்டெப்பை ஆடுமாறு ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களிடம் ‘உங்களுக்கு இந்த ஸ்டெப்பே போதும் என தோன்றவில்லையா?’ என்று நான் கேட்கிறேன். வேறு பாடல்களுக்கும் ஆடத் தயாராக உள்ளேன். ஒரே ஸ்டெப்பை மீண்டும் மீண்டும் ஆடுவது எனக்கே சலிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
