நடிகர் சர்வானந்த் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது அவர் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைக்கர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். யு.வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் ராஜசேகர், பிரமாஜி மற்றும் நடிகை மாளவிகா நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் பின்னணியில் உருவான படம் என கூறப்படுகிறது. சர்வானந்துக்கு ஜோடியாக மாளவிகா நாயர் நடித்துள்ளார். மேலும், ‘ரன்’ திரைப்படத்தில் நடித்த அத்துல் குல்கர்னி இதில் எதிர்மறை வேடத்தில் தோன்றுகிறார்.
இந்நிலையில், ‘பைக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிரெய்லரின் தொடக்கத்திலேயே இந்திய பந்தய வீரர்கள் உலகத் தரத்தில் போட்டியிட முடியுமா என்ற கேள்வியுடன் காட்சிகள் விறுவிறுப்பாக தொடங்குகின்றன. இதில் ‘விக்கி’ என்ற கதாபாத்திரத்தில் சர்வானந்த் ஒரு தீவிரமான பைக் பந்தய வீரராக நடித்துள்ளார். மேலும், தந்தை-மகன் உறவை மையமாகக் கொண்ட உணர்ச்சி காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ராஜசேகர், சர்வானந்தின் தந்தையாகவும் கடுமையான பயிற்சியாளராகவும் நடித்துள்ளார்.
