சினிமா துறையில் உச்ச நிலையில் இருக்கும் காலத்திலேயே அரசியலுக்கு நுழைந்தவர் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுத்ததால் படம் வெளியீடு தாமதமானது. இதையடுத்து, படக்குழு நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மீண்டும் தணிக்கைக் குழுவிடம் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்டது.
தற்போது, படம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் ஆய்விற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், படத்தில் இடம்பெற்ற சில அரசியல் சார்ந்த வசனங்கள் ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லீ ஆகியோர் பத்திரிகையாளர்களாக தோன்றும் காட்சிகளில் இடம்பெற்றிருந்த சில வசனங்கள் மறுஆய்வு குழுவினால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகளில் நடிகர் விஜயை நோக்கி கேட்கப்படும் அரசியல் கேள்விகள் இருந்ததால், அவை தணிக்கைக்குழுவினால் ஒலி நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
