ஷங்கர் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் புதிய திரைப்பட முயற்சி உருவாகி வருகிறதா என்ற கேள்வி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் இணைந்து புதிய கதைக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், ஷங்கரின் கதை உருவாக்கக் குழுவில் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களை மையமாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஏ.ஆர். முருகதாஸ் உருவாக்கும் கதையை ஷங்கர் இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல் தொடர்பாக ஷங்கர் அல்லது ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாக தெரியாத நிலையில் உள்ளது.
சமீபத்தில் வெளியான ‘மதராஸி’ திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை பார்த்த ஷங்கரும் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். இதனிடையே, ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து ‘வேள்பாரி’ கதையை மூன்று பாகங்களாக உருவாக்கும் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கவுள்ள அந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்திற்கான கதையைத்தான் ஏ.ஆர். முருகதாஸ் உருவாக்கி வருகிறாரா என்பது குறித்து தற்போது தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதையை ஷங்கர் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சன்னி தியோல் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் இந்திப் படத்தின் கதையிலும் ஏ.ஆர். முருகதாஸ் பங்களித்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
—
