தெலுங்கு நடிகை ஸ்வேதா லக்ஷ்மண் நடித்துள்ள ‘சஹா: லைப் ஆஃப் சஞ்சு’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “எங்களது படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” என்று அவர் சவால் விடுத்துள்ளார். சுமாரியா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிஷாந்த் டோட்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவ குமார் கசாரம் கதாநாயகனாகவும், ஸ்வேதா லக்ஷ்மண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 4-ம் தேதி ‘சஹா: லைப் ஆஃப் சஞ்சு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை ஸ்வேதா லக்ஷ்மண் பேசிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் ஸ்வேதா, முதல் முறையாக திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஸ்வேதா லக்ஷ்மண், “எங்களது படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவில்லை. இதில் முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவில்லை. ஆனால், கதை ரீதியாக இந்தப் படம் மிகவும் பெரியது. மிகுந்த நம்பிக்கையுடன்தான் இந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு வருகிறோம். இந்தத் திரைப்படம் முழுவதும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் பல விஷயங்களை நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் அனுபவித்திருப்பீர்கள். வலி, தியாகம், உணர்வுகள் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒருவருடைய வாழ்க்கையில் எடுக்கப்படும் ஒரு முடிவு, அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பதையும் இப்படம் எடுத்துக்காட்டுகிறது” என்று கூறினார்.
மேலும், “இந்தப் படத்தை அனைவரும் பாருங்கள் என்று நான் கெஞ்சிக் கேட்கவில்லை; மாறாக உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்தப் படத்தை பார்த்த பிறகு இது நல்ல படம் என்று நீங்களே கூறுவீர்கள். ஒருவேளை உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால், பிரபலமான அமீர்பேட்டின் நடுப்பகுதியில் நின்று நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன். இதன் மூலம் நாங்கள் சிறந்த கதையம்சம் கொண்ட ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” என்றார். இதேபோல், படத்தின் கதாநாயகன் ஷிவ குமாரும், “இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், என்னை அலைபேசியில் அழைத்து திட்டுங்கள்” என்று கூறியுள்ளார். இவர்களின் பேச்சுகள் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
—
