இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களில் இருந்து ‘காட் மோட்’ பாடல் முதல் சிங்கிளாக சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தற்போது, இப்படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு முதலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் விலகியதையடுத்து, சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்தார். இதுகுறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூறுகையில், “ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பெரிய இசையமைப்பாளர் விலகியபின், அதே அளவிலான ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று பலர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.
இந்த படத்திற்கு முன்பு நான் சாய் அபயங்கரை நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால் அவரிடம் நான் மிகுந்த ஆற்றலை கண்டேன். அந்த ஆற்றலை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இதை தயாரிப்பு குழுவினருக்கும், சூர்யாவுக்கும் தெரிவித்தேன். ரஹ்மானை மாற்றி ஒரு புதியவரை கொண்டு வருவது மிகப் பெரிய மாற்றம் தான். இருந்தாலும் என்னை நம்புங்கள் என்று கூறினேன். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இது சாய் அபயங்கரின் முதல் பெரிய திரைப்படமாகும். தற்போது அவர் பல புதிய திட்டங்களில் இணைந்துள்ளார். இன்று இந்த முடிவு சரியானது என்று அனைவரும் உணர்கிறார்கள். அடுத்த தலைமுறை ரசிகர்கள் அவரது பாடல்களை அதிகம் ரசிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
